Saturday, 18 January 2014

நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து !!!


                      தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும், ஜனவரி, 19ம் தேதி, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.  

                   தமிழகத்தில், 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில், சொட்டு மருந்து வழங்கப்படும். சொட்டு மருந்து வழங்கும் மையம், காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, 19ம் தேதி ஒரு தவணையும், அடுத்த மாதம், 23ம் தேதி, இரண்டாம் தவணையும், சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

                  தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில், சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படுகிறது. இது, விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது. முகாம் அன்று, தனியார் டாக்டர்களும், போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் அன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

 நடமாடும் குழு: 

                 முகாம் நடைபெறும் நாள் அன்று, பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கிய பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகியவற்றில், 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சொட்டு மருந்து வழங்கும் பணியில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு !!!


                            சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. 

                         தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதற்காக சிறப்பு தேர்வும் நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின், பணி நிரந்தரப்படுத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட் டவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டது. 

                      அதன் அடிப்படையில் நடந்த மறுதேர்விலும் சுமார் 480 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 20 தவறானது. இதற்கு விடை எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் கொடுத்தால், அவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்கள். இல்லாவிட்டால் மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

                       இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கணினி ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.சங்கரனும், அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியனும் ஆஜராகி வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உ த்தரவிட முடியாது, மனுவை தள்ளுபடி செய்கிறோம். தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனுதாரர்கள் கோரியதை ஏற்க முடியாது’’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி !!!


                      மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

                      தமிழக அரசு பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 2006-ஆம் ஆண்டில் ஆயிரத்து 880 நிரந்தர கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. இந்த பணியிடங்களில் சேர 1999-2000-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த தாற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் பணி நிரந்தரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

வாகை சூட வாழ்த்துவோம் !!!


    கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!
                        கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடையனையும் கடைதேற்றுவதற்கு (95% தேர்ச்சி விழுக்காடு பெற வைப்பதற்கு) என்னென்னவெல்லாம் செய்யலாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாம் என பல கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும் அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளாலும் நடத்தப்பெற்றன. அவ்வுயரிய நோக்கத்தை எட்டும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உதவிடும் வகையில் சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.

B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு !!!


                                                      B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும். மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும்.

                                               (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304)
முகவரி: Registrar, Tamilnadu teachers education university, chennai- 600 005)

Tuesday, 14 January 2014

5 லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 10.1.2014 வெள்ளிக்கிழமை தொடங்கி 22–ந்தேதி வரை 37–வது சென்னை புத்தக கண்காட்சி நடக்கிறது !!!.


                             தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஜி.ஒளிவண்ணன் ஆகியோர் கூட்டாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

                            37–வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 22–ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமான நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் கண்காட்சி நடைபெறும்.கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் 777 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் பதிப்பாளர்களுக்காக 435 அரங்குகளும், ஆங்கில பதிப்பாளர்களுக்காக 263 அரங்குகளும், ஊடக பதிப்பாளர்களுக்காக 59 அரங்குகளும், 20 புரவலர் மற்றும் இதர அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

                           கண்காட்சியில் 5 லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம் பெறும். இதில் 3 ஆயிரம் தலைப்புகள் கீழ் புத்தகங்கள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் 13 நாட்களிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது.மாலை 4 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியிட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

                          மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி, கட்டுரை போட்டிகளும் நடக்கிறது.இந்த ஆண்டுமுதல் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியும் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களிடையே மனிதநேயத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ரத்த தான முகாம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

                           முதியோர்கள் கண்காட்சி அரங்குக்கு சுலபமாக வந்து செல்ல நுழைவுவாயிலில் இருந்து இலவச வாகன வசதியும் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அரங்கை எளிதில் சுற்றிப்பார்க்க இரு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

                            வாசகர்களுக்கு புத்தக கண்காட்சியின் அடுத்தடுத்து நிகழ்வுகள் குறித்து செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் முறையும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு ரூ.10 அனுமதி கட்டணம் வசூலிக்கப்படும்.

                             22–ந்தேதி மாலை நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில், பதிப்புத்துறை, புத்தக விற்பனைத்துறையில் 25 ஆண்டுகள் பணி செய்த பபாசி உறுப்பினர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுகளும், பரிசும் வழங்கப்படும். என்று அவர்கள் கூறினார்கள்.  37–வது சென்னை புத்தக கண்காட்சி சின்னமும்வெளியிடப்பட்டது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்துக்கள் !!!


அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்துக்கள் !!!



Sunday, 12 January 2014

தமிழ் நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் !!!

தமிழ் நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

                                                   'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி, பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென,' உயர்,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.

                                                தமிழ் நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தன், மாநில மகளிரணி செயலாளர் திருமதி. சொர்ணலதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 தீர்மானம்: 

1.  அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிப்பது, 

2. ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் 1:20 படி, ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவேண்டும்.

 3.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். 

4. கல்வித்துறை, பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். 

5.  ஒவ்வொரு ஆண்டும், பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, மே- இறுதிக்குள் நடத்திட வேண்டும். 

               இந்த கோரிக்கைகளை, வலியுறுத்தி, மாநில அளவில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவதென, தீர்மானித்தனர்.  மாநில நிர்வாகி சேதுசெல்வம் நன்றி கூறினார்.

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். 

 பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். 

 தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், 
பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,
 பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், 
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்                 

 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.   மொத்தம் 100 மதிப்பெண்.

 தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.

பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:– 

 12–ம் வகுப்பு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)

 80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண் 

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்

 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்

50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

 பட்டப் படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 

50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

 50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

 பி.எட். படிப்பு 70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)

 50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

 தகுதித்தேர்வு 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்) 

80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண் 

70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்

 60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் !!!


                               முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் !!!


                                                   ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

                                                       முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர் இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

   ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: 

                                                 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்

                                          . அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்: நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

                                           இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி!!!


                                             காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

                                         இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்